You are here
தலைவாசல் > Uncategorized > மதுரையில் “திலீபன் தெரு” – வந்தது எப்படி?

மதுரையில் “திலீபன் தெரு” – வந்தது எப்படி?

அப்போதைய அரசியல் களப் பேச்சு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றியே நடைபெற்று வந்தது. இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்ற பேரில் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுத்தது தவறு என்பதை உணர்ந்திருந்தோம். அதுமட்டுமின்றி, ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி திலீபன் நடத்திய சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை இந்திய அரசு கண்டு கொள்ளவே வில்லை.

செப்.26ஆம் நாள் திலீபனின் இறப்புச் செய்தி பேரிடியாக காதில் விழுந்தது. அன்றைய நாளில் அனைவரும் கலங்கிப் போனோம். அப்போதைய செய்தித் தாள்களில் “திலீபன் மரணம்; விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் போர் தொடங்குமா?” என்ற வினாவோடு தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. தினகரன் ஏடானது (ஆசிரியர்: கே.பி.கந்தசாமி) திலீபனின் பனிரெண்டு நாள் பட்டனிப் போராட்டத்தை ஒவ்வொரு நாளாக வெளியிட்டு படிப்போர் நெஞ்சை உருக வைத்தது.

திலீபன் இறந்து சில வாரங்களுக்குப் பிறகு, பாலன் என்ற தோழர் ஒருவர் வந்தார். அவர் “நான் குடியிருக்கும் தெருவில் ஒரு சில வீடுகள்தான், ஆனால் தெருவிற்குப் பெயரே கிடையாது. இதனால் கடிதங்கள் எதுவும் வந்து சேருவதில்லை ” என்று புலம்பினார்.

அப்போது , அண்ணன் பாண்டியன் அவர்களுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. திலீபன் பெயரை வைத்தால் என்ன? எல்லோரிடமும் கேட்டார். எல்லோரும் திலீபன் பெயரை வழி மொழியவே, பாலனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. மறுநாள் ஒரு தகரம் அடித்த சிறு பலகையை தயார் செய்து கொண்டு வந்தார். அதிலே “திலீபன் தெரு” என்று எழுதிக் கொடுத்தோம். உடனடியாக கொண்டு போய் தெருமுனையில் பெயர்ப் பலகையை நிறுத்தி விட்டு சிலநாள் கழித்து எங்களிடம் பாலன் வந்தார். அப்போது புன்முறுவலோடு “இப்போது கடிதங்கள் ஒழுங்காக வருகின்றன. மிக்க நன்றி!” என்றார்.

” ஒரு ஈகியின் பெயரை மக்களிடையே உச்சரிக்க வைத்த உங்களுக்குத் தான் முதல் நன்றி” என்றோம்.

திலீபன் பெயர் மதுரை மாநகராட்சி தெருப் பெயர் பட்டியலில் ஏற்றப்பட்டு விட்டது. 30 ஆண்டுகள் கடந்த நிலையிலும் திலீபன் கம்பீரமாக தற்போது காட்சியளிக்கிறார்.

Leave a Reply

Top