பீஜி
நமது பெருமை' மிக முக்கிய பதிவுகள்

பீஜி தமிழர்கள்

ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக் பெருங்கடலில் 7055 சதுரமைல் பரப்பில் சிதறிக் கிடக்கும் 300 தீவுக் கூட்டங்களைத்தான் பீஜித் தீவு என அழைக்கப்படுகிறது. தீவின் தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970 இல் விடுதலை அடைந்தது.இன்று இங்கு வாழ்ந்த தமிழர்கள் அவுஸ்திரேலியா ,நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சட்ட பூர்வமாக இடம்பெயார்ந்த் விட மீதி தமிழர்களில் ஒரு பகுதியினர்.

 

வேறு மொழி பேசுபர்வர்களுடன் கலந்து விட(பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்களாக) மீதி சாரார் இன்னும் தமிழர் என்னும் அடையாளத்துடன் வாழ்கின்றனர்.

 

பீஜி
பீஜி

 

 

 

 

 

 

 

 

 

பீஜி
பீஜி

 

 

 

 

 

 

 

 

 

 

 

1874-ஆம் ஆண்டு பீஜித்தீவு பிரிட்டனின் முழுக்குடியேற்றமானது. ஆள் பிடித்து கரும்புத் தோட்டத்திற்கு கொண்டு வரும் கங்காணி முறை மூலம் 1879-1916க்கு இடையே கப்பல்களில் 65,000 இந்தியத் தொழிலாளர்கள் வந்தனர்.(இதில் பெரும்  பகுதியினர் தமிழர்கள்)

பீஜியில் தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத்தை அமைத்த சென்னை மாகாணத்திலிருந்து சென்ற ஸ்ரீ சாது குப்புசாமி எழுதிய குறிப்பு கூறுவதாவது: “5 வருச அக்ரிமெண்டு ஒப்பந்தத்தில் சி.எஸ்.ஆர் கம்பெனி வேலைக்கு நான் வந்தபோது புருஷர்களும் ஸ்தீரிகளும்(ஆண்களும் பெண்களும்) ஒப்பந்தத்தில் வந்திருந்தார்கள். அச்சமயத்தில் சி.எஸ். ஆர் கம்பெனி கொலம்பர்கள் என்னும் அதிகாரிகள் ஒப்பந்த முறையில் வந்த ஜனங்களுக்குத் தன் வாயால் சொல்வதே சட்டம்.

கொலம்பர்களுக்குக்கீழ் இருந்து வேலை செய்யும் அதிகாரிகளைச் ‘சர்தார்‘ என்பார்கள். கொலம்பர்கள் வாயால் சொல்லும் வார்த்தைகளைச் சர்தார்கள் நடைமுறையில் நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த ஆள்களுக்கு ஒவ்வொரு தினமும் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்ற திட்டங்களைக் கொலம்பர்கள் சர்தார்களுக்குச் சொல்வார்கள். சொல்லும் அளவுக்கு திட்டப் பிரகாரம் வேலை செய்து முடிக்காத ஆள்களுக்கு அவர்களைக் கீழே தள்ளி (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)  மார்பு மேல் குத்தினார்கள். உதைத்தார்கள். கூலியைக் குறைத்தார்கள். வாயால் சொல்லத் தகாத அசிங்கமான வார்த்தைகளால் புருஷர்களையும் ஸ்திரீகளையும் திட்டினார்கள். இதுவன்றிக் குறித்த அளவு திட்டப்படி வேலை செய்து முடிக்காததைப் பற்றிச் சில சமயங்களில் கொலம்பர்கள் மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் போய்ச் சொல்லுவார்கள். இதைப் பற்றிக் கோர்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மனும் வரும். குறித்த அளவுப்படி செய்யாத குற்றத்தால் கோர்ட்டுகளில் அபராதமும் விதிப்பதுண்டு.

 

கரும்பு எஸ்டேட்டுகளில் சாதாரணமாய் ஜனங்கள் செய்து வந்த வேலைகளாவது:

  • ஏர் உழுதல்
  • கரும்பு நடல்
  • புல்வெட்டுதல்
  • மோரி வெட்டுதல்
  • கரும்பு வெட்டுதல்
  • கரும்புக்கு உப்பு எரு முதலியன போடுதல். 

     

இதுவும் தவிர ஒப்பந்தக் கூலிகளாகிய புருஷர்களையும், சர்தார்மார்களும் கொலம்பர்களும் கரும்பு வயல்களில் செய்யும்  கொடுமைகளை  பொறுக்க முடியாமல் எதிர்த்து அடித்த அக்குற்றங்களுக்காக, சர்க்காரால் தண்டணை விதிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போய் வந்தவர்கள் அநேகம் பேர்கள்.

 

1917 இல் கொத்தடிமைக் குத்தகைச் சட்டம் ஒழிக்கப்பட்டது. 1920-இல் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பீஜித்தீவில் குடியேறுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தொழிலாளர்களின் 2-ஆம் கட்டப் போராட்டம் : பீஜித்தீவில் இருந்த கரும்புத் தோட்டங்கள் முழுவதும் சி.எஸ்.ஆர் என்ற ஆஸ்திரேலியா கம்பெனிக்குச் சொந்தம். ஒவ்வோர் இந்திய விவசாயிக்கும் பத்து ஏக்கர் நிலம் பத்து ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டது. அதில் ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம். ஒன்பது ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில் சொந்தமாகப் பயிரிட்டுக்கொள்ளலாம். கரும்பு முற்றிய பிறகு அதனை வெட்டி வண்டி நிறைத்துக் கொடுக்கவேண்டும். அதனை கம்பெனியார் சர்க்கரை ஆலைக்குக் கொண்டு செல்வார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயி பெற வேண்டும். சர்க்கரை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். ஒரு டன் சர்க்கரையின் விலையில் 30% விவசாயிக்கு; 70 விழுக்காடு, அரைத்து சர்க்கரை செய்த கம்பெனிக்கு. “சி.எஸ்.ஆர். கம்பெனியார் ஆறுமாத காலம் கரும்பை அரைத்துப் பிழிகிறார்கள். ஆண்டு முழுவதும் இந்தியர்களை அரைத்துப் பிழிகிறார்கள்.” என்று சுவாமி அவிசானந்தர் கூறினார்.

பாரத தேசத்திலிருந்து பீஜிக்கு ஐந்து வருட ஒப்பந்தம் முடிந்ததும் தமிழர்கள் கய் மித்திகளிடம் லஜன் பேரில் நிலம் பிடித்துக் காடு வெட்டிப் பண்படுத்தி விவசாயம் செய்தார்கள். சிலர் சி.எஸ்.ஆர் கம்பெனி இடமே வேலையும் செய்தார்கள். மற்ற கம்பெனி களிலும் வேலை செய்தார்கள். சிலர் சொந்த வியாபாரம் செய்து வந்தார்கள். இப்படி சுயமாய்ப் பாடுபட்டு வீடுவாசல்களை அமைத்துக் கொண்டு சந்ததிகளுடன் வாழ தொடங்கின்றார்கள்.

‘லங்கா தகனம்’ –  தாங்கள் விளைவித்ததை தாங்களே எரித்த புரட்சி

இரண்டாம் உலகப் போர் காலத்தில் கரும்பு-விறகின் அளவுக்கு விலை குறைந்து விட்டது. விவசாயிகள் முறையீட்டை அரசோ, கம்பெனியோ செவிசாய்க்கவில்லை. விவசாயிகளின் அவலத்தை உணர்ந்த சுவாமி ருத்திரானந்தனர், விவசாயிகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார். சுவாமிஜியும், வழக்கறிஞர் அம்பாலால் பட்டேலுக்கும் அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. அவர்கள் தங்கியிருக்கும் ஊருக்கு வெளியே செல்லக்கூடாது என்பதே அது. விவசாயிகளை மீறி கம்பெனியார் கரும்பு வெட்ட முயன்றனர். தாங்கள் விளைவித்த பயிரை தாங்களே எரித்துப் பொசுக்கினர். பீஜி தமிழர் வரலாற்றில் இந்நிகழ்ச்சி ‘லங்கா தகனம்’ என அழைக்கப்படுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. பீஜி விடுதலை அடைந்தபிறகு லார்டுடென்னிங், சர்க்கரை விலையில் விவசாயிக்கு 65 விழுக்காடும், ஆலை முதலாளிக்கு 35 விழுக்காடும் என்று தீர்மானம் செய்தார். இத்தீர்மானம் கம்பெனியாருக்கு பாதகம் எனக்கருதி நிலங்களையும், கரும்பு ஆலைகளையும் விற்க முடிவு செய்தனர்.

கரும்பு விவசாயத்தோடு சர்க்கரை உற்பத்தி விற்பனை ஆகிய எல்லாவற்றிலும் 45% விழுக்காடு குத்தகைகாரர்களான இந்திய விவசாயிகளுக்கு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து வெற்றியும் பெற்றனர்.

 

 

கரும்பு கேள்விக்கு ஏற்றப்பட்ட வீழ்ச்சியும் சரியான் பொருளாதார முன்னேற்றமும் பெரும் பகுதி தமிழர்களை அவுஸ்ரேலியா ,நியூசிலாந்து என இடம்பெயர செய்தது.

 

1937-ஆம் ஆண்டு இராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த அவிசா நந்தர் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார். இதன் பயனாக அரசு தாய்மொழி கல்விக்கு தலை அசைத்தது. 1926 முதலே தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் தமிழ் கல்விக்காக போராடி வந்தது. நாடு முழுவதும் சங்கம் பல பள்ளிகளை நிறுவியது. அவை ‘சங்கப்பள்ளிகள்’ என அழைக்கப்பட்டன. 1950க்குப் பிறகு தமிழ் கல்வி நலியத் தொடங்கியது. 1940 இல் ஒரு இலட்சம் தமிழர்கள் பீஜியில் இருந்தார்கள். இன்று 30,000 பேர் வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர். 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறை ஏற்பட்டுள்ளது. 1986-இல் 2000 பேர் 12 பள்ளிகளில் தமிழ் படித்தார்கள். இன்று பீஜியில் சங்கம் நடத்தும் 13 பள்ளிகளிலும் மற்ற மூன்று பள்ளிகளிலும் தமிழ்க் கற்றுத் தரப் படுகிறது. தமிழகத்திற்கு மேல்படிப்பிற்கு வரும் பீஜித் தமிழர்களுக்கு 16 கல்லூரிகளில் இடம் தரப்படுகிறது.

பெரும்பான்மையான தமிழர்கள் விவசாயிகள், பெரும்பான்மையான விவசாயிகள் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஓரளவு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர். சிலர் 10 ஏக்கர் நிலத்தின் சொந்தக்காரர்களாகவும் இருக்கின்றனர். சொந்தமாக டிராக்டர் கூட பலர் வைத்திருக்கின்றனர். மூன்றில் 2 பேர் வானொலி; 20 இல் ஒருவர் வீடியோ வைத்திருக்கின்றனர். 40இல் ஒருவர் கார் வைத்திருக்கிறார். சில தமிழர்கள் குஜராத்திகள் கடையில் பணிபுரிகின்றனர். இவர்கள் வீடுகளில் தமிழ்ப் பெண்கள் வேலை செய்கின்றனர். சிலர் ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிகின்றனர். பெரும் பதவி வகித்தத் தமிழர் மாணிக்கம் பிள்ளை ஆவார். இவர் அமைச்சர் அலுவலகத்தில் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்.

நெருக்கடிக் காலம் :

1975-ஆம் ஆண்டு இந்தியர்களை நாடு கடத்த முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது. 1987-ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் பீஜியில் தேர்தல் நடந்தது. இந்தியர்களுக்கு மிகுதியான செல்வாக்கு உள்ள அரசு முதன் முதலாகப் பதவிக்கு வந்தது. இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு ஓங்கியதை விரும்பாத பீஜியர்கள் கர்னல் ராம்புகா தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் ‘இந்தியர் ஆட்சியை’ கவிழ்த்தார்கள் இராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது. இதற்குக் காரணம் வட இந்தியர்களில் குஜராத்திகள் பெரிய வணிகங்களை தம் கையகப்படுத்தியதிலிருந்து பீஜியர்களுக்கும்-இந்தியர்களுக்கும் நெருக்கடி உருவானது. இதில் அப்பாவி தமிழர்களும் அல்லல் படுகின்றனர். இதையடுத்து தமிழர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலியவற்றிற்கு குடிபெயறும் நிலை தோன்றியுள்ளது.

 

பொங்குணகடல் கடந்து-சென்றிப் பூவுலகத்திலே எங்கெங்கு வாழ்ந்தாலும்-தமிழர் ஏககுலத்தவராம் கோடாரி மண்வெட்டி-கலப்பை கூந்தாலி ஏந்துவோரே நாடெல்லாம் ஆளுகின்ற உண்மை நாயகராவாரையா! பாழ்நிலத்தையெல்லாம்-திருத்திப்பயன் படுத்தி மக்கள் வாழ் நிலமாகத்-தமிழர் மாற்றின தாரறியார்? இலங்கை சிங்கபுரம்-பீஜி முதல் இன்னும் பலவான தலங்களின் செல்வம்-தமிழர் தந்த செல்வமன்றோ?” –கவிமணி தேசிகவிநாயகம்

பீஜி தமிழர்கள் தொடர்பான காணொளிகள்

 

http://www.youtube.com/watch?v=URHSrFi4CRE

 

பீஜி சிறீ சிவ சுப்பிரமணிய  கோவில்
                           பீஜி சிறீ சிவ சுப்பிரமணிய கோவில்