நமது பெருமை' மிக முக்கிய பதிவுகள்

பத்துமலை (Batu Caves) -மலேசியா முருகன்

மலேசியாவில் பிரசித்தமான முருகன் கோவில் ,மலேசியாவில் மட்டுமல்ல அதையும் தாண்டி உலக அளவில் மிக பிரசித்தமானது.தமிழர்களையும் தாண்டிசுற்றுலா சினிமாத்துறை என அனைத்தும் இதனால் ஈர்க்கப்பட்டு உள்ளது.

இந்த பத்து எனபது Batu என்னும் குறித்த மலைப்பகுதியின் பெயரில் இருந்து வந்தது.

கோவிலின் அமைவிடத்தை பார்ப்போம்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மி தொலைவில் கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது .

இங்கு சுண்ணாம்புக் குன்றுகளின் இயற்கையாக அமைந்த குன்றுகள் உண்டு!இதன் அருகே பத்து (battu) என்னும் ஆறு ஓடுகின்றது.

1860 ஆண்டுகளில் இம்மலையை அண்டிய வாழ்ந்த சீனமக்கள் காய்கறி விவசாயம் வந்தனர். அவர்களுடைய விவசாயத்திற்கு உரம் தேவைப்பட்டது. ஆகவே, அவர்கள் பத்துமலைக் குகைகளிலிருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அதற்கு முன்னர் இந்தக் குகைகளில் தெமுவான் எனும் மலேசியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.இவர்களுக்கும் இம்மலை ஒரு புனித தலமாக இருந்தது.

 

1878-இல் பத்துமலைப் பகுதிகளில் இருந்த சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்த அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே என்பவர் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்கு அறிவித்தார். பத்துமலையின் பெயர் புகழடைந்தது.அதன் பின்னர் 14 ஆண்டுகள் கழித்து 1891-இல் தம்புசாமிப் பிள்ளை அங்கு ஒரு கோயிலைக் கட்டினார். பத்துமலைக் கோயிலின் நுழைவாயில் ஒரு வேல் வடிவத்தில் இருந்தது அவரைப் பெரிதும் கவர்ந்தது.
ஒற்றையடிப் பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபடும் சிறு கோயிலாக கட்டி அமைத்தார்.

1892-இல் பத்துமலையில் முதல் தைப்பூசம் பத்துமலைக் கோயில் முருகப் பெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. 1892-இல் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1920-இல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

 

 

உலகிலேயே உயரமான முருகன்

உலகிலேயே உயரமான முருகன் சிலை பத்துமலையில் தான் உள்ளது.தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர் (140அடி). இதை உருவாக்குவதற்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன. கட்டுமானச் செலவு 25 இலட்சம் மலேசிய ரிங்கிட்.இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புனிதத் திறப்புவிழா செய்தார்கள். இந்தச் சிலையின் திறப்பு விழாவின் போது அதற்கு 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை சுமார் ஒரு டன் எடை. அதனால், பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது.

 

 

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலின் கலை ஓவியத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய முயற்சி நடந்து வருகிறது. இந்தச் சிலை ஏற்கனவே மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.சிலையை உருவாக்குவதற்கு 1,550 கன மீட்டர் பைஞ்சுதை (cement), 250 டன் எஃகு கம்பிகள், தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டன.

 

தமிழ்நாடு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் சிலை உருவாக்கம் கண்டது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர்.

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் நிர்வாகத்தை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் கவனித்து வருகிறது. இந்தத் தேவஸ்தானம் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு சமய அற நிறுவனமாகும். இது கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எஸ்.லீ எனும் முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இந்து அமைப்புகளில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் தான் மிக மிகப் பழமையானது, மிகவும் பண வசதி படைத்தது.

இங்கு உள்ள குகைகளின் கதை

இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.இந்தச் சுண்ணாம்புக் குகைகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்பதால் இங்கு காணப்படும் சிறுரக விலங்குகளும் சற்று மாறுபட்டு உள்ளன. அதற்கு Liphistiidae ரக சிலந்திகளையும் அல்லது ரக வௌவால்களையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இங்குள்ள மாக்காவ் குரங்குகள் பத்துமலையைச் சுற்றிப் பார்க்க வருபவர்களிடையே மிகவும் புகழ் பெற்றவை. மனிதர்களுடம் இவை மிக நெருக்கமாகப் பழகுகின்றன. அந்த நெருக்கத்தில் சுற்றுப்பயணிகளை, குறிப்பாகச் சிறுவர்களை அக்குரங்குகள் சில சமயங்களில் கடித்து விடுவதும் உண்டு.

பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படாத சில குகைகளும் உண்டு

நக்கீரருடன் சம்பந்தபடும் வரலாறு !

இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

 

குகைக் கோயிலுக்குக் கீழே இருண்ட குகை உள்ளது. மலேசியாவில் வேறு எங்கும் இல்லாத சில அரிதான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.அந்த இருண்ட குகையில் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்ட நிலக்குடைவுகள் இருக்கின்றன. குகைகளின் உட்கூரையில் தொங்கும் ஊசிப்பாறைகளும் குகைத் தரையில் சுண்ணக்கல் புற்றுகளையும் ஆயிரக்கணக்கில் காண முடிகின்றது.

இந்த ஊசிப்பாறைகளும், சுண்ணக்கல் புற்றுகளும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் குகைத் திரைகள், குகை முத்துக்கள், இரட்டை வழிச் சோழிகள் போன்றவற்றை உருவாக்கி வருகின்றன. பத்துமலைக் குகைகளின் சூழலியலைப் பாதுகாக்கும் பொருட்டு இருண்ட குகையின் உள்ளே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், மலேசிய இயற்கை கழகம் அவ்வப்போது சிறப்பு கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கின்றது.

 

பத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன.

இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அவற்றில் முருகக் கடவுள் சூரவதம் செய்யும் காட்சிகள் அருங்கலை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

பத்துமலையின் ஆக இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது. இந்த இராமாயண குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் சிலையைக் காண முடியும். அனுமாரை குலதெய்வமாக வழிபடுவோருக்காக அங்கே ஒரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயில் நவம்பர் 2001-இல் திறப்புவிழா கண்டது. இராமாயண குகையில் இராமரின் வாழ்க்கைத் தத்துவங்கள் அழகான ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.