தொழில்நுட்பம் மிக முக்கிய பதிவுகள்

காலப்பயணம் -ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)

காலப்பயணம் சாத்தியமா என்று விளக்கும் அவரது கட்டுரை ஒன்றில் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லியிருப்பதுதான் மேலே இருக்கும் மேற்கோள். பலப்பல ஆண்டுகளாக புத்தகங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் தவறாமல் இடம்பெறுவது இந்த காலப்பயணம் என்ற வஸ்து. வேறொரு காலத்தில் மூக்கை நுழைப்பது என்பது மனிதனின் ஆழ்மன ஆசைகளில் ஒன்று. எக்கச்சக்கமான வேலைகளை செய்யலாம் என்பதே காரணம். போதாக்குறைக்கு திரைப்படங்கள் இந்த ஆசையை நன்றாகவே தூண்டிவிட்டிருக்கின்றன. ஆனால், காலப்பயணம் என்பது முற்றிலும் கற்பனையானது என்பது சராசரி மனிதர்களாகிய நமக்கே தெரிந்திருக்கும்போது, ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள் ஏன் அவ்வப்போது எதையாவது இப்படிப் பேசி நம் ஆசையைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்?

 

காரணம் இருக்கிறது. அதற்கு முன்னர், காலப்பயணத்துக்கு இன்றியமையாத தேவையாக இருக்கும் இன்னொரு வஸ்துவையும் பார்க்கவேண்டும். அதுதான் Wormhole.

மிக மிக எளிமையாக சொல்லப்போனால், நாம் தற்போது நம் ஊரில் அமர்ந்துகொண்டு கணினித் திரையை நோக்கியவாறே எதையாவது நோண்டிக்கொண்டிருக்கிறோம். அப்போது திடீரென நமக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. ‘இன்னும் அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவில் வந்து முதலில் என்னைச் சந்திப்பவர்களுக்கு 500 கோடி அளிக்கப்படும்’ என்று பில் கேட்ஸ் அறிவித்திருக்கிறார். இது முற்றிலும் நம்பகமான உண்மை என்று வைத்துக்கொள்ளலாம். எப்படி அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவுக்குச் செல்வது?

இருக்கும் இடத்தை விட்டு எழுகிறோம். ஜாலியாக நமது அறையில் இருக்கும் ஒரு கதவைத் திறக்கிறோம். கதவின் மறுபக்கத்தில் அன்டார்ட்டிகா. தொலைவில் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு பில் கேட்ஸ் நிற்கிறார். அடுத்த நிமிடம் நம் கையில் 500 கோடி. இதுதான் Wormhole. இரண்டு இடங்களை இணைக்கும் ஒருவித பாலம் போன்ற அமைப்பு. அந்த இரண்டு இடங்களுக்கும் இடையே இருக்கும் தூரம், மனித மனதால் கற்பனையே செய்யமுடியாத ஒரு மிகப்பெரிய தூரமாகவும் இருக்கலாம்.

இது சாத்தியமா?

அவசியம் சாத்தியம்தான் என்பதுதான் ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து. இன்னும் சொல்லப்போனால், தற்போதுகூட நம்மைச் சுற்றிலும் எக்கச்சக்கமான wormholeகள் உள்ளன என்று சொல்கிறார் ஹாக்கிங். அப்படியென்றால் எளிதில் இதுபோன்று எங்குவேண்டுமானாலும் செல்லலாமே? அங்குதான் கதையில் ட்விஸ்ட். தற்போது இருக்கும் wormholeகள் அளவில் மிக மிகச் சிறியவை. எந்த அளவு என்றால், ஒரு சென்டிமீட்டரில், ட்ரில்லியனில் ட்ரில்லியனில் பில்லியன் பாக அளவே இவை இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு எதுவுமே செய்யமுடியாது. இவ்வளவு சிறிய வஸ்துக்களுக்குள் எப்படி மனிதன் நுழைய முடியும்?

Wormhole-stephen hawking

இவை எங்கே இருக்கின்றன? க்வாண்டம் மெகானிக்ஸில் Quantum Foam என்ற ஒரு பதம் உண்டு. எந்தப் பொருளுக்குள்ளும் அடிப்படையாக இருக்கும் ஒரு துகள். இதனை எப்படி அளப்பது? மனிதர்களால் அளக்கக்கூடிய அளவைகளில் இதுவரை இருப்பதிலேயே சிறிய அளவு ஒன்றை, Planck Length என்று அழைப்பார்கள். இதை எண்ணிக்கையில் சொல்லவேண்டும் என்றால், 0.00000000000000000000000000000000001 என்று அதனைக் குறிக்கலாம் (டெஸிமல் பாயிண்ட்டுக்குப் பின்னர் 34 ஸைஃபர்கள்). எனவே, இத்தனை சிறிய ஒரு வஸ்துவை நாம் wormholeஆக உபயோகிக்க முடியாது. கூடவே, இந்த வார்ம்ஹோல்கள் உருவானவுடனே அழிந்துவிடுபவை.

சரி. எப்படியாவது ஒரு வார்ம்ஹோலைப் பிடித்து, அதனை பலப்பல மடங்குகள் பெரிதாக்கினால், அப்போது மனிதன் அதனுள் செல்ல இயலும். அதேபோல், இப்படிச் செய்வதன்மூலம் நம்மாலேயே சொந்தமாகப் பெரிய வார்ம்ஹோல்களை உருவாக்கலாம். அப்படி நடந்தால்?

பூமியின் அருகே இந்த வார்ம்ஹோலின் ஒரு பகுதி. அதன் மற்றொரு பகுதி, எங்கோ தொலைதூரத்தில், நம்மால் கற்பனையே செய்துபார்க்கமுடியாத விண்வெளியின் மற்றொரு இடத்தில் இருக்கும். எனவே, இதனுள் நுழைந்தால், குறுகிய காலத்தில் அந்த இன்னொரு பகுதிக்குப் போய்விடமுடியும். இதனால் தூரம் என்பது குறுகிவிடுகிறது. மனிதன் விண்வெளியின் பலப்பல இடங்களை ஆராயமுடியும்.

இது, தூரம் என்பதை மனதில்கொண்டு உருவான தியரி. அதுவே, இந்த வார்ம்ஹோலின் இரண்டு முனைகளும், ‘காலம்’ என்ற அளவையால் பிரிக்கப்பட்டால்? அதாவது, வார்ம்ஹோலின் இரு முனைகளுமே பூமியை நோக்கியே குவிக்கப்பட்டால், ஒரு முனையில் நுழைந்து, மற்றொரு முனையின் வழியாக நாம் வெளியேறும்போது பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முன்போ பின்போ பூமியை நாம் பார்க்கலாம். இதுதான் விஞ்ஞானத்தின் பார்வையில் காலப்பயணம். ஆனால், இதற்கான சில முன்னேற்பாடுகள் இருக்கின்றன. நாம் பயணிக்கும் தூரம் என்பது ஒரு மணி நேரத்துக்கு ஐந்துகோடி கிலோமீட்டர்களாக இருக்கவேண்டும். அதேசமயம், இதில் உள்ள ஒரு சிக்கல் – இதன்மூலம் நம்மையே கடந்தகாலத்தில் நாம் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அப்போது ஒரு துப்பாக்கியை எடுத்து நாம் நம்மையே சுட்டுவிட்டால் என்ன ஆகும்? இத்தகைய ஒரு சிச்சுவேஷன் தான் paradox. நடக்குமா நடக்காதா என்று சொல்ல இயலாத ஒன்று. உண்மையில் Grandfather Paradox என்பது விஞ்ஞானத்தில் புகழ்பெற்ற ஒன்று. கடந்த காலத்தில் நமது தாத்தாவை பேச்சிலராக சந்தித்து, அவரைக் கொன்றுவிட்டால், தற்காலத்தில் நாம் உயிரோடு இருக்கமுடியுமா?

இதனால்தான் – இப்படிப்பட்ட குழப்படிகள் நேரலாம் என்பதால்தான், காலப்பயணம் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்றும் விஞ்ஞானிகளால் சொல்லப்படுகிறது. Cause & Effect என்பது நமக்கெல்லாம் தெரியும். ஒரு செயல் நடந்தபின்னர்தான் அதன் விளைவு நடக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட ஒரு கால இயந்திரத்தை நாம் கண்டுபிடித்து, நம்மையே கடந்தகாலத்தில் சென்று சுட்டுக்கொண்டால், விளைவு என்பது ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே நடந்துவிடுகிறது அல்லவா? இப்படி நடக்கலாமா? இத்தனை கோடி ஆண்டுகளாக இந்த ப்பிரபஞ்சம் எதுவோ ஒரு விதியைப் பின்பற்றித்தான் செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அப்படி ஒரு சம்பவம் நடப்பதை எப்படியாவது பிரபஞ்சம் தடுத்துவிடும் என்பது ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து. கூடவே, அப்படி ஒரு வார்ம்ஹோல் உருவாக்கப்பட்டாலும்., இயல்பான ரேடியேஷன் அதனுள் புகுந்து, அந்த வார்ம்ஹோலையே அழித்தும் விடும். இதனால், வார்ம்ஹோல்கள் உருவாக்கப்படும் சாத்தியம் இல்லை.

ஆனால், காலப்பயணம் என்பது முற்றிலும் சாத்தியப்படாத விஷயமும் இல்லை. எப்படி? காலம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே போன்று இல்லை. பூமியில் இருக்கும் காலம், எங்கோ விண்வெளியில் இருக்கும் காலத்தைவிட வேறானது. ஒரு பொருளின் mass – நிறை என்பது அதிகமாக ஆக, அங்கே காலம் மெதுவாக ஆகிறது என்பது ஐன்ஸ்டைன் சொன்னது. இப்போது, மேலே மேற்கோளில் சொல்லப்படும் கருந்துளை என்பதைப் பற்றி யோசித்தால், நமது Milky Way நட்சத்திர மண்டலத்தின் நட்டநடுவே, இருபத்தாறாயிரம் ஒளி வருடங்களுக்கப்பால், மிகப்பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட னாஙு மில்லியன் சூரியன்களின் நிறையை ஒரு மிகச்சிறிய புள்ளியில் பெற்றிருக்கும் வஸ்து இது. இந்தக் கருந்துளையில்தான் காலம் என்பது குறைகிறது. அதாவது, ஒரு விண்கப்பல் இந்தக் கருந்துளையை சுற்ற ஆரம்பித்தால், காலம் என்பது அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்குப் பாதியாகக் குறைகிறது. இதனால், எவ்வளவு காலம் அந்தக் கப்பல் கருந்துளையை சுற்றுகிறதோ, பூமியின் காலம் அதைப்போல் இரண்டு மடங்காகிவிடும். அவர்கள் பத்து வருடங்கள் சுற்றிவிட்டு பூமிக்கு வந்தால், இங்கே 20 வருடங்கள் முடிந்திருக்கும். இதுதான் காலப்பயணம்.

இதேபோல் இன்னொருவிதமாகவும் காலப்பயணத்தை மேற்கொள்ளலாம். அது- ஒளியின் வேகத்தில் பயணிப்பது. ஒளியின் வேகம் – ஒரு செகண்டுக்கு 186,000 மைல்கள். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, இந்த வேகத்தை மிஞ்சவே முடியாது. அது சாத்தியமற்றது. ஆனால், இந்த வேகத்துக்கு அருகே – இதில் 99.99% அளவு வேகத்தை ஒரு விண்கப்பல் அடைந்தால், அப்போது காலப்பயணம் சாத்தியம். அப்படி மட்டும் நடந்தால், இந்த வேகத்தில் பயணிக்கும் விண்கப்பலில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் (பிரம்மாவின் ஒரு நாள் என்பதற்கு ஹிந்து மதம் கொடுத்திருக்கும் கணக்குகளையும் அப்படியே ஒருமுறை இங்கே பார்த்துவிடுங்கள்). இப்படி மட்டும் நடந்தால், நமது நட்சத்திர மண்டலமான மில்க்கி வேயின் எல்லையை பூமியில் இருந்து எட்டிப்பிடிக்க வெறும் 80 வருடங்கள்தான் ஆகும். மட்டுமில்லாமல், பூமிக்கு நாம் திரும்பிவரும்போது கணக்கிலடங்கா வருடங்கள் கழிந்திருக்கும். இதுதான் ரிலேட்டிவிடி தியரி.
இப்போது, இதுவரை நாம் பார்த்தவற்றில் முக்கியமான விஷயங்களான காலப்பயணம், கருந்துளையை விண்கலம் சுற்றுவது, Wormhole ஆகியவற்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இணையத்தில் லீக் செய்யப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் திரைக்கதையைப் படித்தால், இந்த மூன்றும் அந்தப் படத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிகிறது. இந்தத் திரைக்கதை உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால், படிக்கப்படிக்க அதில் நோலன் சகோதரர்களின் முத்திரை நன்றாகவே தெரிகிறது. இந்தத் திரைக்கதைக்கும் Inception திரைக்கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.

திரைக்கதையின்படி, வார்ம்ஹோல் ஒன்றுதான் ஒட்டுமொத்தத் திரைக்கதையிலும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. வேறு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நாம் மேலே பார்த்த காலப்பயணம் இதில் இருக்கிறது. அதாவது, ஒரு கருந்துளையை சுற்றும் விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது எக்கச்சக்கமான வருடங்கள் கழிந்திருப்பது. கூடவே, மெலிதான காதல் ஒன்றும் இதில் இருக்கிறது. திரைக்கதையின் இரண்டாம் பகுதி படுவேகமாக செல்கிறது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக. படத்தின் முதல் டீஸரைப் பார்த்தாலும், அதற்கும் இந்தத் திரைக்கதைக்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால் இணையத்தில், இந்தத் திரைக்கதையை மாற்றித்தான் நோலன் படமாக எடுத்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது எடிட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. படத்தை எங்கெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கும், திரைக்கதையில் வரும் லொகேஷன்களுக்கும் தொடர்பு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்தத் திரைக்கதையைப் படித்துவிட்டுப் பார்த்தால், சென்ற ஆண்டு வெளிவந்த Gravity படத்தைப் போல, இந்த ஆண்டின் இறுதியில் இண்டர்ஸ்டெல்லார் இருக்கப்போவது உறுதி. க்ராவிடி, இண்டர்ஸ்டெல்லருக்கான ஒரு ட்ரெய்லராக அமையும் என்று தோன்றுகிறது.

விண்வெளி என்ற புதிர் இன்னும் விஞ்ஞானிகளின் மனதை ஆட்டுவித்துக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக: விண்வெளியின் எல்லை எது? அந்த எல்லைக்கப்பால் வேறொரு விண்வெளி இருக்கிறதா? இதுபோன்ற விஷயங்களை ஆராய்ந்தறியவேண்டும் என்றால் வார்ம்ஹோல்கள் அவசியம் தேவை. இந்தக் கேள்விக்கே பதில் இந்தத் திரைக்கதையில் இருக்கிறது. கூடவே, நிலவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் சென்றதே ஒரு கட்டுக்கதை என்றும் திரைக்கதையில் வருகிறது. பல கற்பனைக்கெட்டாத பிரம்மாண்டங்கள் (கான்ஸெப்ட்களாக) இந்தத் திரைக்கதையில் வருகின்றன. இதனால்தான் இந்தத் திரைக்கதை (இதேபோன்று எடுக்கப்பட்டிருந்தால்) அனைவருக்கும் பிடிக்கும் என்பது என் கருத்து.

பொதுவாக விண்வெளிப்பயணத்தைப் பற்றிய படங்கள் அத்தனையிலும் கிட்டத்தட்ட ஒரேபோன்ற கான்ஸெப்ட்களே இருக்கும். உதாரணமாக, 2012ல் வெளிவந்த Prometheus படத்தை எடுத்துக்கொண்டால், வேற்று நட்சத்திரம் ஒன்றுக்குச் செல்லும் சில பயணிகள் என்பதுதான் அதன் கரு. அதில் உபயோகப்படுத்தப்பட்ட கான்ஸெப்ட்டின் பெயர் – Stasis. விண்கலத்தின் crew, தூக்கத்தில் ஆழ்த்தப்பட்டு காலத்தைக் கடப்பதே இந்த ஸ்டாஸிஸ். அந்தப் படத்தில் ஒரு ஆண்ட்ராய்ட் ரோபோ வருகிறது. அதேபோல் இண்டெர்ஸ்டெல்லார் திரைக்கதையிலும் ரோபோக்கள் வருகின்றன. ஆனால் ப்ராமிதியஸ் போன்ற திராபையாக இது இல்லை. முதல் பகுதி மிகவும் மெதுவாகச் சென்றாலும், இரண்டாம் பாதி அட்டகாசமான வேகத்தில் சென்றது. இந்தத் திரைக்கதையைப் படித்தபோது, Event Horizon படம் நினைவு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் அது ஒன்று. ஈவெண்ட் ஹொரைஸன் படத்திலும் வார்ம்ஹோல் வருகிறது. ஆனால் அந்தப் படத்தில், செயற்கையான கருந்துளையை உருவாக்கி, அதன்மூலம் ஒரு வார்ம்ஹோலை உருவாக்குவது பற்றி இருக்கும். இதன்மூலம் அந்த விண்கலம், விண்வெளியின் இன்னொரு எல்லைக்குச் சென்றுவிடும். அங்கு இருப்பது – நரகம். மிகவும் வித்தியாசமான கற்பனையில் எடுக்கப்பட்ட படம் அது. ஆனால், சரியாக ஓடவில்லை. கிட்டத்தட்ட இண்டர்ஸ்டெல்லார் மற்றும் ஈவண்ட் ஹொரைஸன் படங்களின் கரு ஒன்றுதான். ஆனால், இண்டர்ஸ்டெல்லார், நோலன் சகோதரர்களால் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கிறது. நோலன் சகோதரர்களின் முத்திரையான முன்னும் பின்னும் திரைக்கதையில் லிங்க் செய்வது இதில் இருக்கிறது. அப்படி இணைக்கப்படுபவைதான் திரைக்கதையின் ட்விஸ்ட்களில் ஒன்று.

இதேபோல், இந்த வார்ம்ஹோல் கான்ஸெப்ட், 2006ல் வெளிவந்த Déjà Vu படத்திலும் லேசாக உபயோகிக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் வரும் Snow white கருவியின் மூலம், கதாநாயகன் கடந்தகாலத்துக்குச் செல்வது (மேலே நாம் பார்த்த வார்ம்ஹோலின் இரண்டு முனைகளும் பூமியில் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இது உதாரணம்). பஸிஃபிக் ரிம் படத்திலும் இப்படி ஒரு வார்ம்ஹோல் கடலின் அடியில் இருக்கும்.

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments