நமது பெருமை' மிக முக்கிய பதிவுகள்

இலங்கையும் சேர – கேரள தேசத்து மலையாளிகளும்

இலங்கைக்கும் மலையாள தேசமாகிய கேரளர்த்துக்கு நிறையவே தொடர்புகள் இருந்தன.ஆனால் ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களும் கேரள தேசத்து மலையாள வம்சம் என்று மட்டும் யாராலும் எப்போதும் நிறுவி விட முடியாது.

 

கண்ணகி வழிபாடு இலங்கை தமிழர்களால் வழிபடப்படுகின்றது .”பத்தினி தெய்வோ” என்ற பெயரில் சிங்களர்களும் கண்ணகியை வழிபட்டு வருகின்றனர். கண்ணகி வழிபாடு சேரநாட்டில் செங்குட்டுவனால் தொடங்கப்பட்டதாகவும், கண்ணகி கோயிலின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை அரசன் கஜபாகு கலந்துக்கொண்டதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது. கேரளத்தில் கண்ணகி வழிபாடு இன்றுவரை தொடர்வது கேரளத்திற்கும் இலங்கைக்கும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு ஒரு சான்று எனலாம்.

மங்கள தேவி கண்ணகி
மங்கள தேவி கண்ணகி ஆலயம் ,கேரளா ,இடுக்கி என்னுமிடம் 2000 ஆண்டுக்கு முற்பட்டதாய் சொல்லப்படுகின்றது

 

கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் முக்குவர்கள் ஈழத்தமிழருக்கும் கேரளத்துக்கும் இடையே இருந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு ஒரு முக்கிய சான்றாக இருக்கிறார்கள். முக்குளித்தல், முங்குதல் போன்றத் தமிழ் சொற்களிலிருந்து தான் முக்குவர் என்ற பெயர் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

கேரளத்திலும் குமரிமாவட்டத்திலும் மீன்பிடித்தலையே தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவந்த/வரும் இவர்கள் பழங்காலத்தில் முக்குளிப்பவர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. (ஆனால் முக்குவர்களை மட்டக்களப்புப் பகுதியைத் தோற்றுவித்த மூத்தக்குடிகளாகச் சித்தரிக்கும் “மட்டக்களப்பு மான்மியம்” எனும் பழைய நூல் அவர்களை ‘முற்குகர்’ என்று விளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் அயோத்தியிலிருந்து படையெடுத்து வந்ததாகச் சொல்லி இராமாயணத்தோடு முடிச்சு போடப் படாதபாடு படுகிறது.)

இலங்கையின் வரலாற்றில் முக்குவர்களைப் பற்றிய ஏராளமானக் குறிப்புகள் காணப்படுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் புத்தளம், மட்டக்களப்புப் பகுதிகளில் முக்குவத் தலைவர்கள் குறுநில மன்னர்களைப் போல செயல்பட்டார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கேரளக் கரையோரத்திலிருந்துப் படையெடுத்து வந்த முக்குவர்கள் இலங்கையின் மேற்குக் கரையிலுள்ள புத்தளம் பகுதியைக் கைப்பற்றிக் குடியேறினர் என்று ‘முக்கர ஹட்டண‘ என்னும் சிங்கள ஓலைச்சுவடி சொல்கிறது.

முக்கர ஹட்டண – தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது

 

இதன் காரணமாக அப்போதைய சிங்கள அரசன் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்துக் கரையர்களைத் திரட்டி அவர்கள் உதவியுடன் முக்குவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று, பின் கரையர்களைப் புத்தளம் பகுதியில் குடியமர்த்தியதாக அந்த ஓலைச்சுவடி தெரிவிக்கிறது. இப்படிக் புத்தளத்தில் குடியமர்ந்த தமிழ் கரையர்கள் காலப்போக்கில் ‘கரவே’ என்ற பெயரில் சிங்களம் பேசும் சாதியாக மாறிப்போனது மொழி அடையாளத்தை இழப்பது எத்தனை எளிது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அப்பகுதியில் நீர்கொழும்பு போன்ற இடங்களில் வாழும் கரையர்களில் பலர் தங்கள் தமிழ் அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கின்றனர். சரளமாக சிங்களம் பேசும் இவர்களில் பெரும்பாலானோர் இன்றும் தங்களுக்குள் இலக்கணம் சிதைந்த ஒருவிதத் தமிழில் (நான் போகிறேன் என்பதற்கு நான் போறா) தான் பேசிக்கொள்கிறார்கள்.

முக்குவர்கள் முதன்முதலில் மட்டக்களப்புப் பகுதியில் நுழைந்தபோது அங்கு ஏற்கனவே வாழ்ந்துவந்த திமிலர் என்னும் மீனவ சாதியினரோடு அவர்களுக்கு மோதல் ஏற்பட்டு, பின்  திமிலர்களை வென்று அப்பகுதியைக் கைப்பற்றினார்கள் என்று கருதப்படுகிறது.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது கேரளத்தின் தனித்தன்மைகளில் ஒன்றாகத் தாய்வழி சமூகமுறை இருக்கிறது. திருமணத்திற்கு பின் ஆண் தன் மனைவியின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழும் மருமக்கத்யம் முறை கேரளத்தில் பல்வேறு சாதியினரிடையே சில தலைமுறைகள் முன்பு வரை நிலவி வந்தது. ஈழத்தில் குறிப்பாக மட்டக்களப்பை ஒட்டிய கிழக்குப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலுள்ள சில சாதியினரிடையேயும் இம்முறை (மனைவியின் ‘குடி’யில் கணவன் இணைவது) வழக்கில் இருந்துவந்திருக்கிறது.

ஆயினும் குடிகளின் பரிமாற்றம் பிரித்தானிய காலத்துடன் மன்னர் காலத்தில் குறைவே!

சரி கேரள தொடர்பு இருந்ததென்றால் ஏன் மலையாள மொழி இங்கு பெருமளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை

கேரளத்தில் (சேர நாட்டில்) சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வரைத் தமிழே பேச்சுமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இருந்த நிலையில் அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வடநாட்டிலிருந்து வந்துக் குடியேறிய நம்பூதிரி பார்ப்பனர்கள் சமூகத்தில் முதன்மைப் பெற்றதால் தமிழுடன் சமஸ்கிருதச் சொற்களை அதிகமாகக் கலக்கும் மணிப்பிரவாள நடை தோன்றி நாளடைவில் அது மலையாளமாக உருமாறியது. ஆனால் மணிப்பிரவாளமும் மலையாளமும் ‘உயர்’சாதியினரின் மொழியாகவும், அவர்கள் ஆதிக்கம் செலுத்திய அரசுகளில் ஆட்சிமொழியாகவும் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் தமிழ் மொழியின் வட்டார வழக்குகளையே தொடர்ந்துப் பேசி வந்தனர்.இன்றும் கூட தனி சமூகமாக வாழும் கேரளப் பழங்குடியினரின் மொழி மலையாளத்தை விட்டு விலகியதாகவும் சமஸ்கிருதக் கலப்பற்றதாகவும் இருக்கிறது.

கேரளத்திலும் இலங்கையிலும் தற்போது வாழும் ஒரே சாதியான முக்குவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டின் இவர்களிடையே மதமாற்றத்தை மேற்கொண்ட போர்த்துக்கீசிய/இஸ்பானிய பாதிரிகள் அதற்கு தமிழ் மொழியையேப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். கேரளத்தின் தென்பகுதியில் வாழ்ந்த முக்குவர்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை குமரிமாவட்டத்தில் பேசப்படுவது போன்ற தமிழையே பேசிவந்தனர்.

மலையாளமும் தமிழும்
மலையாளமும் தமிழும்

 

 

.பாண்டியர்கள் ,சோழர்கள் , வட தேசத்து சாம்ராச்சியங்கள் கொண்டிருந்த அளவு தொடர்புகளை சேர சாம்ராச்சியம் இலங்கையை ஆண்ட தமிழ்,சிங்கள அரச வம்சங்களுடன் ஆதரவாகவோ எதிராகவோ இருக்கவில்லை.
இதை விட இந்திய உபகண்டத்தின் மேற்கு பகுதி அமைவு இயற்கையான தொடர்புகளை குறைத்தது எனவே சொல்லலாம்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இந்த தொடர்புகள் அதிகமானது.

மலையாளிகளின் வருகையை நாம் இந்த பிரித்தானிய காலனித்துவம் என்னும் ஒற்றை சம்பவத்தில் பார்த்தாலும் அவர்களின் பாதையை ரெண்டாக பார்க்க வேண்டி இருக்கிறது.
ஒன்று வடக்கு ,மற்றும் திருகோணமலைக்கு வந்த மலையாளிகள்
ரெண்டாவது தென்னிலங்கைக்கு வந்த மலையாளிகள்.

வடக்கு பகுதிக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு மலையாளிகள் கொண்டு வரப்பட்ட நோக்கம் புகையிலை என்னும் பணப்பயிர் செய்கை.

இன்று கூட யாழ் பகுதிகளில் புகையிலை ஒரு பணப்பயிர் தான்.யுத்தத்தின் முன்னர் இந்த புகையிலை தோட்டங்கள் பல செல்வந்தர்களை உருவாக்கியது.(மலபாரில் இன்றைக்கும் மலாபார் பீடி பேமஸ்).

 

சுதந்திரதின் பின்னர் வந்த சட்டங்களால் இதன் ஏற்றுமதி மலையாளிகளுக்கு சார்பாக அமையாததால் அவர்களால் நின்று பிடிக்க முடியவில்லை. ஒரு சாரார் தம் தாய் தேசம் செல்ல மறு பகுதியினர் தமிழர்களாகவே மாறிப்போனனர்.

 

யாழ்ப்பாணம் புகையிலை தோட்டம்
யாழ்ப்பாணம் புகையிலை தோட்டம்
மலபார் பீடி
மலபார் பீடி

பெரும்பாலும் இந்த தோட்ட செயக்கைகளுக்கு இங்கு கொண்டு வரப்பட்ட மலையாளிகள் கலப்போக்கிக்கில் தமிழர்களுடன் கலப்பு திருமணங்களால் தமிழர்களாகவே மாறிப்போனர். அதுபோக மலையாளம் கூட தமிழ் தாய் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே.

 

 

 

 

இன்றும் யாழ்ப்பாண பகுதியில் இருக்கு சில வழக்குகள் இந்த தொடர்பையும் கலப்பையும் நமக்கு சொல்லி காட்டுகின்றன.

 

யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப்படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள்.

 

பேரா. சிவத்தம்பி கட்டுரையில் இலங்கைத் தமிழர்களின் உணவுமுறை தமிழக உணவுப் பழக்கங்களிலிருந்து வேறுப்பட்டிருப்பதை (எடுத்துக்காட்டாக தேங்காய், மிளகு அதிகமாகவும், தயிர், மோர் ஆகியவை குறைவாகவும் பயன்படுத்துதல்) சுட்டுகிறார். இது கேரள உணவுமுறையை ஒத்திருக்கிறது.

 

குழல் பிட்டு
குழல் பிட்டு

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை சொல்லி ஆகணும் தேசிய தலைவர் பிரபாகரன் அண்ணன் அவர்களின் தந்தையார் வேலுப்பிள்ளை ஐயா ஒரு மலையாள வம்சத்தை சேர்ந்தவர்.

 

குறிப்பாக வேலுப்பிள்ளையின் உறவினராக 77 வயதான ஜானகி அம்மாள் என்பவர் அறியப்பட்டார். இவர் கொல்லத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பூந்தளத் தாழத்தில் வசித்து வருகின்றார்.

1991-களில் ராஜிவ் காந்தி கொலையான சமயத்தில் காவல் துறையினர் இவர்களை அழைத்து விசாரித்ததாக 81-வயது நிரம்பிய ஜானகி அம்மாளின் கணவன் பரமேஸ்வரன் பிள்ளை கூறினார்.

தாம் சிறு வயதாக இருந்த போது தமது தாய் மாமனான வேலுப்பிள்ளையைக் கண்டிருப்பதாகவும். தனது தாயாரோடு பிறந்த ஐந்து சகோதரர்களில் ஒருவரே வேலுப்பிள்ளை எனவும் கூறினார். அது மட்டுமில்லாமல், யாழ்ப்பாணத்தில் இருந்து 18.12.1953-யில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தையும் அவர் வைத்திருக்கின்றார். அக் கடிதத்தில் வேலுப்பிள்ளை, வளை பீடாக் கடை, 224, காங்கேசன் துறை ரோடு, யாழ்ப்பாணம் என்ற முகவரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறு பகுதியினரை பார்த்தால் தென்னிலங்கைக்கு வந்தவர்கள்.
இவர்களில் ஒரு சாரார் துறைமுக தொழிலாளர்களாகவும் ,அரச (பிரித்தானிய ) உத்தியோகத்தர்களாகவும் ,வியாபாரிகளாகவும் வந்தனர். இவர்கள் மீது சிங்களம் தன அடக்கு முறையை இயன்றளவு பாவித்தது.

 

இறுதியில் தென் பகுதியில் இருந்து மலையாளிகளை சிங்களம் அடித்து விரட்டியது என்றே சொல்லலாம்

இன்னொரு வகையாக சொன்னால் இவர்களால் தமது நிலவுகை பாதிக்கப்பட்டு விடுமோ என் சிங்களம் அஞ்சும் அளவுக்கு பிரித்தானிய அரச இயந்திரத்தில் வியாபாரத்திலும் பங்கெடுத்து செல்வாக்கு செலுத்தியிருந்தார்கள் மலையாளிகள்.
என்ன இருந்தாலும் மலையாளிகள் திறமை சாலிகள் தான் !

இவர்கள் இலங்கை முழுவதும் பல்வேறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டு வந்திருந்தனர். இலங்கையில் அப்போதிருந்த தொழிலாளர்களில் மலையாளிகளே பெரும்பங்கானவர்களாக இருந்தனர். அவர்கள் தொழிற்சாலைகளில், தொடர் வண்டி நிலையங்களில், கடைகளில், செல்வந்தர்கள் வீடுகளில் பணியாற்றி வந்தனர். அது மட்டுமில்லாமல் பல்வேறு மலையாளிகள் ஆசிரியர்களாகவும், கணக்கர்களாகவும், சிறு வியாபாரிகளாகவும், தேநீர் கடைகள், உணவகங்கள் நடத்துபவர்களாகவும் இருந்தனர். கள்ளிறக்கும் தொழில் செய்யவும் பல்வேறு மலையாளிகள் இருந்துள்ளனர். 1930-களில் சுமார் 30, 000 மலையாளிகள் தென்னிலங்கையில் இருந்ததாக கூறப்படுகின்றது

 

முன்னாள் தமிழக முதல்வரான எம்.ஜி. ராமச்சந்திரன் கூட இலங்கையின் மலையக பகுதியை சேர்ந்த இலங்கையில் பிறந்த ஒரு மலையாள வம்சாவளி என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

MGR
MGR

மலையாளிகள் போகாத ஊர் இல்லை என்பார்கள். சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் போய் இறங்கின போது அங்கு ஒரு மலையாளி, ‘சேட்டன் சாயா வேணுமோ’ என்றபடி வந்தாராம் என்று ஒரு பகிடிக் கதை தமிழ்நாட்டில் உள்ளது.
இந்த மலையாளிகள், தமிழ்நாட்டில் தமிழ் இனவெறிக்கு ஆளாகி உள்ளார்கள், மும்பாயில் மராத்திய இனவெறித் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளார்கள். ஆனால் அவர்கள் எங்கிருந்தும் அசையவில்லை;. எப்படியாவது எல்லா இடங்களிலும் தங்களை தக்க வைத்துக் கொண்டுவிடுவார்கள்.

 

‘மலையாளிகள் இலங்கையில் தனித்துவமான ஒரு சமூகமாக இல்லாத போதிலும், இலங்கைக்குக் குடிவந்த தொழிலாளர் சமூகமாக இருந்த போதும்கூட, இந்த நாட்டின் அரசியலில் ஆக்கமான தாக்கமொன்றை ஏற்படுத்தினர். அவர்கள் இந்த நாட்டடின் மக்களோடு தம்மை நெருக்கமாக்கிக் கொண்டதுடன் தொழிற்சங்க, அரசியல் உரிமைகளை வெல்வதற்குப் பங்களித்துள்ளனர். 20ம் நூற்றாயண்டின் முற்பகுதயில் இலங்கையிலிருந்த மலையாளத் தொழிலளரும், புத்திஜீவிகளும் இடதுசாரி இயக்கத்திற்கும் தொழிலாளர் இயக்கத்திற்கும் வழங்கிய தலைமைத்துவப் பங்கு, 1930களில் சிங்களப் பேரினவாதிகளின் சீற்றத்திற்குக் காரணமாயிற்று.’ எனக் குறிப்பிடுகிறார் சி.சிவசேகரம் அவர்கள்.

.

1933இல், குணசிங்க அவர்களின் தலைமையிலிருந்த இருந்த வெள்ளவத்தை நூல் ஆலைத் தொழிற்சற்கத்தை இடதுசாரிக் குழுக்கள் தன் வசம் ஆக்கிக் கொண்டனர். அந்த நூல் ஆலையில் ஏராளமான மலையாளிகள் தொழிலாளர்களாக இருந்தனர். வெள்ளவத்தையில் (மயூரா பிளேசுக்கும் கிருலபனைக்கும் இடையில்) இருந்த நூல் ஆலையில் – (Wellawatte Spinning and Weaving Mills) வேலை செய்த மலையாத் தொழிலாளர்களின் வம்சாவழியினர் இன்னமும், மயூரா பிளேசில் உள்ள மயு}ராபதி அம்மன் கோவிலுக்கு பின்னால் உள்ள ‘லைன்’ வீடகளிலும் அதனை அண்டிய சொந்த வீடுகளிலும் இன்னமும் வ சித்து வருவதைக் காணலாம். அவர்களில் பெருமபாலானோர் இன்று தமிழர்களாகவும் சிலர் சிங்களவர்களாகவும் மாறிவிட்டனர்.

பெருந்தொகையிலான மலையாத் தொழிலாளர்கள் இடதுசாரிக் குழுக்களோடு இணைந்து செயற்படத் தொடங்கினர். இது குணசிங்கவிற்கு கடுப்பை ஏற்படுத்தியது.
1936 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான ‘இலங்கை சமசமாசக் கட்சி’ ஆரம்பிக்கப்பட்டது.
தொழிற்சங்க அரசியலின் ஏக போக தலைவராக ஏ.ஈ.குணசிங்க இருந்த நிலையில் இந்த இடதுசாரிக் கட்சியின் வருகை அவருக்கு மேலும் கடுப்பை ஏற்படுத்திற்று. இதன் காரணமாக மலையாளிகள் எதிர்பியக்கத்தை, தன் நேரடி அரசியல் எதிரிகளான இடதுசாரிகளை தாக்குவதற்கு அவர் பயன்படுத்தினார்.

மலையாளக் கம்யூனிஸ்ட்டுக்கள் இலங்கையில் ‘நவசக்தி’ என்னும் பத்திரிகையை வெளியிட்டனர்.
இக் காலகட்டத்தில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் சில இடதுசாரிகள் வெற்றி பெறுவதற்கு இந்த மலையாளிகளின் வாக்குகளே காணமாக இருந்துள்ளன.

Grandpass Broadway – ஆமர் வீதி சந்தியில் சிறீ நாராயணகுரு நினைவு மண்டபம் இன்றும் இருப்பதைக் காணலாம். கொழும்பில் மலையாளிகளின் பூர்வீகத்தைச்சொல்லும் அழுத்தமான சின்னம் அது.

Sree Narayana Guru Malayali Memorial Hall
Sree Narayana Guru Malayali Memorial Hall

அதுதவிர மலையாளிகள் சங்கம் இன்னமும் இயங்கி வருகிறது. இச்சங்கம் ஏதாவதொரு கட்சிக்கு ஆதரவு அறிக்கையை ஒவ்வொரு தேர்தலிலும் விடுப்பதை நீங்கள் பத்திரிகைகளில் எப்போதாவது கண்டிருக்கலாம்.

கொட்டாஞ்சேனைப்பகுதியில் ஏராளமான மலையாளிகள் தமிழர்களோடு கலப்புமணம் செய்துகொண்டு தமிழர்களாகவே மாறி வாழ்கின்றனர். கொட்டாஞ்சேனைப் பகுதித் தமிழில், “அங்ங்கன, இங்ஙன ” போன்ற மலையாளச் சொற்களை அவதானிக்கலாம்.
இன்று கொக்கா கோலாவின் விளம்பரச்சின்னமாகவே மாறிவிட்டிருப்பதும், இலங்கையின் சிறப்பான உணவுப்பொருளாக ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கூடப் பரிமாறப்படுவதுமான “கொத்து ரொட்டி” மலையாளிகள் கொண்டு வந்தது.
கப்பல் தொழிலாளிகளாக இருந்த மலையாளிகள் அவர்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த விலையில் க்கிடைத்த கோதுமை, மீந்த கறிகளை சூடான கல்லில் போட்டுக் கொத்தி உண்டிருக்கிறார்கள்.

1940 களில் மலையாளிகளில் பெருந்தொகையானோர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
இலங்கை விடுதலையடைந்த பின் குடியுரிமைச் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட இடர்பாடுகளால் பலரால் தொடர்ந்து இலங்கையில் வாழ முடியவில்லை.இங்கு உள்ளவர்களை மணம் செய்துகொண்டவர்கள் இலங்கையிலே தங்கிவிட்டனர். அவர்களின் அடுத்த சந்ததியினர் தமிழர்களுடனும் சிங்களவர்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர்.”

 

இன்று  மலையாளிகள் இன்று சிங்களவருக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்ற கருத்து உள்ளது. அதில் உண்மையும் உள்ளது என்ற போதும், சிங்கள பாசிசவாதிகளின் மலையாள எதிர்ப்பியக்க வரலாற்றை இன்று நாம் அனைவருமே மறந்தே போய்விட்டோம். மலையாளிகள் இன்று இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
இன்றையக் கட்டத்தில் இந்தியாவில் வலுவான நிலையில் இருக்கும் மலையாளிகளின் பங்கை சிங்கள பேரினவாத அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது. மலையாளிகளில் நாயர், மேனன், நம்பூதிரி என ஆதிக்கச் சாதி சக்திகள் சிங்கள பேரினவாதத்துக்கு துணை போனனர்.

விரிவான ஆய்வுகளும் தொடர்களும் துருவி குழுமத்தால் தொடரும்.
நன்றி
அறிவால் எழுவோம்

One Reply to “இலங்கையும் சேர – கேரள தேசத்து மலையாளிகளும்

Comments are closed.